Translate

Friday 9 February 2018

குணம் தரும் நேர்மறைச் சிந்தனை

எண்ணம்தான் வாழ்க்கை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் நல்ல செய்தி என்னவென்றால் எண்ணம் மாறக்கூடியது. மாற்றக்கூடியது. அதனால், எண்ணத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளும் மாறக்கூடிவை. மாற்றக்கூடிவை. சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கை மாறக்கூடியது. மாற்றக்கூடியது.
 
விதைகளாய் எண்ணங்கள்
 
நம் சித்தாந்தங்களும் நம்பிக்கைகளும் சில எண்ணங்களில் உருவானவை தானே? ஜெர்மானிய இனம் தான் உலகை ஆளத்தக்க இனம் என்ற ஹிட்லரின் எண்ணம்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற முக்கியமான காரணமானது. இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற ஜின்னாவின் எண்ணம் பாகிஸ்தானை உருவாக்கியது.
 
தேர்தல் அரசியலில் பகுத்தறிவுக் கொள்கைகளிலிருந்து கட்சி நுழைந்தால் திசை திரும்பிவிடும் என்ற ஈ.வெ.ரா.வின் எண்ணம் தான் திராவிடர் கழகத்தை அதிகாரத்தில் ஏற்றாமல் வைத்திருந்தது. அதற்கு மாறாக, தேர்தல் அரசியல் தான் திராவிடக் கொள்கைகளைச் செயல்முறைப்படுத்த உதவும் என்ற அண்ணாவின் எண்ணம் தான் தி.மு.க.வை அரியணையில் ஏற்றியது.
 
பெரிய நட்சத்திரங்களை நாடாமல் புது நடிகர்களை வைத்து நல்ல கதைகளை இயக்கினால் மக்கள் ஏற்பார்கள் என்ற கே.பாலச்சந்தரின் எண்ணம்தான் பல புதிய நடிகர்களை அறிமுகப்படுத்த வைத்தது. (பின்னாளில் அவர்களில் பலர் அவரே பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிய நடிகர்கள் ஆனார்கள் என்பது தனிக் கதை!)
 
சிலரின் முக்கியமான எண்ணங்களே வரலாற்றின் விதைகள்.
 
திருப்புமுனைகளாய்..
 
அதே போல, பலரின் மன மாற்றங்கள் வரலாற்றின் திருப்புமுனைகள். உலக வரலாறு மட்டுமல்ல, உங்கள் வரலாற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். மாறிய எண்ணம்தான் வாழ்க்கைப் போக்கையே திருப்பியிருக்கும். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு எண்ணத்தின் பிரதிபலிப்புதான்.
 
உங்கள் எண்ணம் உங்கள் உணர்வையும், உங்கள் நடத்தையையும், உங்கள் உறவையும், உங்கள் உடலையும் பாதிக்கிறது என்றால் அந்த எண்ணத்தை நீங்கள் மாற்றினால், மற்ற அனைத்தையும் மாற்ற முடியும் அல்லவா?
 
முடியும் என்று எனக்கு முழுவதுமாக புரிய வைத்தவர் லூயிஸ் ஹே.
 
வெற்றிச் சின்னமாய் லூயிஸ்
 
ஒன்றரை வயதில் தந்தை, தாயைப் பிரிகிறார். தாயை மணந்தவரும் கடுமையாக நடந்து கொள்கிறார். ஐந்து வயதில் பக்கத்து வீட்டுக் கிழவன் பாலியல் பலாத்காரம் செய்கிறான். 15 வயதில் கர்ப்பம். பிள்ளையில்லா தம்பதியிடம் கொடுத்துக் குற்ற உணர்ச்சியுடன் பிரிகிறார். படிக்காததால், கிடைத்த வேலைகளைச் செய்கிறார். மெல்ல மெல்ல ஒரு மாடல் நடிகை ஆகிறார். தாயை விட்டுப்பிரிகிறார்.
 
புகை, மது, பல ஆண்களுடன் உறவு எனச் செல்லும் வாழ்க்கை ஒருவருடன் திருமணம் என்ற திருப்புமுனையை அடைகிறது. 14 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் உலகம் சுற்றி வருகிறார். வாழ்க்கை வசப்படுகையில் இன்னொரு பெண்ணை மணக்க ஆசைப்பட்டு இவரைப் பிரிகிறார் கணவர்.
 
இறை வழியில் கிறிஸ்துவப் பாடங்கள் அவரை வழி மாற்றுகின்றன. தேவாலயத்திலேயே பாடம் எடுக்கும் அளவு வளர்கிறார். மனதுக்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து புத்தகம் எழுதுகிறார். இணை மருத்துவ முறைகளைக் கற்கிறார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்குப் புற்றுநோய் என்று தெரியவருகிறது. மருத்துவர்கள் கையை விரிக்கின்றனர்.
 
உடைந்து போகிறார். பின் தான் கற்றதையும் எழுதியதையும் போதித்ததையும் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துகிறார். தன் மனதில் உள்ள இறுகிப்போன எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளியேற்றுகிறார். தாயைத் தேடிச் சென்று மீண்டும் இணைகிறார். தாயையும் சுகப்படுத்துகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு பரிபூரண அமைதியை உணர்கிறார்கள்.
 
புற்று நோய் குணமாகிறது. தொடர்ந்து புத்தகங்களும் கருத்தரங்குகளும் உலகின் நூற்றுக்கணக்கான மொழிகளில் வெற்றி பெறுகின்றன. தாய் மனநிறைவுடன் இயற்கை எய்துவதற்கு விடை கொடுக்கிறார்.
 
80 வயது கடந்தும் இன்றும் மிகுந்த ஆரோக்கியத்துடனும், துள்ளலும், நகைச் சுவையுடனும், தெளி வான அறிவுடனும் ஆற்றலுடனும் செயல்பட்டு வருகிறார் லூயிஸ் ஹே!
 
ark2_2433009a.jpg
 
எண்ணமும் நோயும்
 
அவரின் எழுத்துக்கள் பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. அப்படிப் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்.
 
எனக்கு ரெய்கி சொல்லித்தந்த ஆசான் அஃபர்மேஷன்ஸ் என்ற ஒரு நேர்மறை சிந்தனை முறை கொண்டு உடல் சார்ந்த எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம், கட்டுப்படுத்தலாம் என்று கூறியபோது முழுவதுமாக நம்ப முடியவில்லை.
 
அது எப்படி எண்ணத்தை மாற்றியே நோயைக் குணப்படுத்துவது? அப்படி என்றால் எல்லாரும் எல்லா நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாமே? அப்படி என்றால் டாக்டர் எதற்கு, ஆஸ்பத்திரி எதற்கு? இப்படித்தான் எனது எண்ணங்கள் இருந்தன.
 
நான் லூயிஸ் ஹேயின் புத்தகங்கள் படித்தேன். அவரின் சிகிச்சை உத்திகள் எவ்வளவு அறிவியல் பூர்வமானவை என்று உணர்ந்தேன். முதலில், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பயன்படுத்தினேன். பிறகு, இதை என் மற்ற வழிமுறைகளுடன் சேர்த்து மற்றவர்களுக்கும் அளித்தேன்.
 
பிறகு பயிற்சி வகுப்புகளிலும் உளச் சிகிச்சைகளுக்கும் தீவிரமாகப் பயன்படுத்தினேன். இதைப் பயன்படுத்தியவர்கள் தந்த குறிப்புகளும் செய்திகளும் என்னை மேலும் நிபுணத்துவம் பெற வைத்தன.
 
தீராத பல உடல் உபாதைகளை நேர்மறைச் சிந்தனை மூலம் குணமாக்க முடிந்தது. Metaphysical Medicine, Mind- Body Medicine, Quantum Healing எனப் பல சிகிச்சை முறைகளுக்கு Affirmations களுக்கு உள்ள தொடர்பு புரிந்தது.
 
உங்கள் உடல் சுகவீனங்களை உங்கள் எண்ணங்கள் மூலம் மாற்றிச் சுகமளிக்கும் வழிமுறை என்ன என்று விளக்கப் போகிறேன். திறந்த மனதுடன் தயாராகுங்கள்!

No comments:

Post a Comment

வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்

வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள்...