நம்மூர்களில் அடிக்கடி திருமண உறவு பற்றி சொல்லப்படும் வாக்கியம் “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” இதற்கு என்ன அர்த்தம்? 60+30=90 நாட்கள், அதாவது, 3 மாதத்திற்கு தான் புது மண தம்பதியர் இல்லற உறவில் இன்பம் அடைகிறார்களா? அதற்கு பிறகு, இன்பம் குறைந்து போகிறதா?
இன்றைய நவீன யுகத்தில், பல திருமணங்கள் முதல் மூன்று மாதங்களுக்கு பின், கசப்பை சந்திக்கின்றன. சிலர் விவாகரத்து கோருகின்றனர். மேலும் சிலர், குடும்பத்திற்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று கருதி, ஒரே கூரைக்குள் ரூம் மேட்ஸ்–ஆக வாழ்கின்றனர். அப்படி என்ன பிரச்சனைகள் 3மாதங்களுக்கு பின் புதுமண தம்பதியர்களுக்குள் எழுகிறது?முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு மண முறிவுகள் ஏன் அதிகரித்து வருகின்றன?
உளவியல் படி, இல்லற உறவு என்பது மூன்று பரிமாணங்களை கொண்டது.
- பாலுறவு
- மனப்பூர்வமான உணர்வுகளில் ஒத்திசைவு
- மற்ற குடும்பத்தினருடன் ஒத்துழைப்பு
இந்த மூன்று பரிமாணங்களில் ஏதாவது ஒன்றில் இன்பம் குறைந்தால் அது மற்ற பரிமாணங்களையும் பாதிக்கும்.
இரண்டாவது, மூன்றாவது பரிமாணங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது,முதல் பரிமாணமான பாலுறவில் முதல் 3 மாதங்களுக்கு பின் அதிக உளவியல் பிரச்சனைகள் இருப்பதாகவும், அவற்றை சரி செய்து கொள்ள முறையான ஆலோசனைகள் கிடைப்பது இல்லை என்றும் என்னிடம் உளவியல் ஆலோசனை பெற வரும் பலர் கூறுகிறார்கள்.
ஏன் மிக அதிக பிரச்சனைகள்? ஆராய்வோமா?
இது நுகர்வு கலாச்சார யுகம். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்,நாம் அனைவரும் நுகர்வு கலாச்சாரத்தின் அடிமைகள் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. நுகர்வு கலாச்சாரத்திற்கும், தம்பதியர் பாலுறவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது.
ஒரு பொருளுக்காக நெடு நாள் ஆசைப்பட்டு கடைசியில் ஒரு நாள் கிடைக்கிறது என்றால் அதை பயன்படுத்திய கொஞ்ச காலத்திலேயே அலுத்து போய், அடுத்த பொருளுக்கு ஆசைப்பட வைக்கிறது இந்த நுகர்வு கலாச்சாரம்.
திருமண வயது இப்போதெல்லாம் ஆண்களுக்கு 30 என்றும், பெண்களுக்கு25 என்றும் ஆகிவிட்ட சூழ்நிலையில், நெடுநாள் தேக்கி வைத்திருந்த பாலுறவு ஆசையை தீர்த்துக்கொள்ள விரும்பி, திருமணம் செய்து பின்னர் கொஞ்ச காலத்திலேயே அது அலுத்து போய், வாழ்க்கையின் அடுத்த கட்ட மகிழ்ச்சியை நாடி மனம் சென்று விடுகிறது. இதுவே நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு. பலருக்கு இந்த கொஞ்ச காலம் என்பது மூன்று மாதங்களாகவே இருக்கிறது.
வேலை செய்யும் இடத்திலும் திருமணமான மூன்று மாதங்கள் வரை,புதிதாய் திருமணம் ஆனவர் என்று கருதி விடுமுறை எடுத்தாலும்,மாலையில் சீக்கிரமே வீட்டுக்கு சென்றாலும், கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு, திருமணத்திற்கு முன் எந்த அளவுக்கு வேலை பார்த்து வந்தார்களோ, அதே போல் வேலை பார்க்க வேண்டும் என்றாலாவது பரவாயில்லை. ‘திருமணம் ஆகிவிட்டது;பொறுப்பாக இருக்க வேண்டும்’ எனவே முன்பு வேலை பார்த்ததை விட அதிக பொறுப்புடன் பிரமோஷனுக்காக வேலை பார்க்க வேண்டும் என்று இந்த சமுதாயம் பிரஷர் கொடுக்கும். இந்த பிரஷரில், தரப்பட்ட எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, வீட்டுக்கு தாமதமாய் களைப்பாய் வந்து சேர்ந்தால், எப்படி பாலுறவு கொள்ள முடியும்?
திருமணம் ஆன பலரிடமும் திருமணமான சில மாதங்களுக்கு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, பின்னர் கேட்கப்படும் ஒரு முக்கிய கேள்வி, “திருமணம் ஆகிவிட்டது, அப்புறம் எப்போது குழந்தை?”
குழந்தை உருவாகி இருந்தால், எப்படியும் 3 மாதங்களுக்கு உள்ளாக தெரிந்து விடும். 3 மாதங்களில் குழந்தை உருவாகாவிடில் குழந்தை உருவாக வேண்டும் என்ற முனைப்பில், பாலுறவு என்பதனை தினமும் செய்யும் ஒரு தினசரி வேலை போல் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே பாலுறவில் கிடைக்க வேண்டிய இன்பம் போய்விடுகிறது.
குழந்தை உருவாகாவிட்டால் தான் பிரச்சனை என்றால், குழந்தை உருவாகிவிட்டாலும் அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. மனைவி கருத்தரித்து இருக்கும் போது, மனைவியோடு பாலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. குழந்தை கருத்தரிப்பதும்,இவ்வாறான சந்தேகம் எழுவதும் பொதுவாக முதல் மூன்று மாதங்களிலேயே நடைபெறுகிறது. குழந்தை கருவில் இருக்கும் போதும்,குழந்தை பிறந்த பிறகும், பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்வதால், அவர்களின் உடற்கட்டு மாறி விடுகிறது. இல்லற உறவின் ஆரம்ப காலங்களில் இருந்து போல் உடல் அழகை பராமரிக்க முடியாமல்,பல திருமணமான பெண்கள் தனது உடற்கட்டை இழந்து விடுகின்றனர்.இத்தனை நாட்கள் ஆராதித்து வந்த அழகு குன்றி விடுவதால், ஆண்களும் திருமணமான புதிதில் மனைவிக்கு தந்த நெருக்கத்தை குறைத்து கொள்கின்றனர்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, 3 மாதங்களுக்கு பின், பிறகு இல்லற வாழ்வில் மகிழ்ச்சி குறையும் என்ற வாக்கு நடைமுறையில் சரிதானோ என்று எனக்கு தோன்றுகிறது. இவ்வாறு புது மண தம்பதிகள் முதல் மூன்று மாதங்களில் பாலுறவு என்னும் ஒரு பரிமாணத்தில் மட்டும்,பல விதமான பிரச்சனைகளை எதிர் கொள்வதால், இல்லற வாழ்வில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. கணவருக்கும், மனைவிக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்பட தொடங்குகிறது. சிலருக்கு இந்த இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகி, மன கசப்புகளையும் முடிவில் மண முறிவு என்று தீர்மானிக்கும் அளவுக்கு சென்று விடுகிறது.
இந்த தொய்வை சரி செய்து, இடைவெளியை குறைத்து, 3 மாதங்களை தாண்டியும் நிலையான இன்பம் பெற, என்னென்ன உளவியல் ஆலோசனைகள் இருக்கின்றன என்று இப்போது பார்க்கலாம்.
நாம் நுகர்வு கலாச்சாரத்தின் அடிமைகள் என்பதால், நம்மை அறியாமல் திருமண வாழ்வும், பாலுறவும் கொஞ்ச நாட்களுக்கு உள்ளாகவே அலுத்து போய் விடும் வாய்ப்பு அதிகம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். தொய்வு ஏற்படும் போதெல்லாம், அதற்கு முக்கியத்துவம் அளித்து, தொய்வை போக்க புதிய யுக்திகளை நாட வேண்டும். தொடர்ந்து எழும் சிறு சிறு இடைவெளிகளே பின்னர் மண முறிவு என்னும் முடிவை எடுக்க வைக்கும்.
பெற்றோர், உடன் பிறந்தோர் போன்ற இரத்த பந்த உறவுகளில் இடைவெளி ஏற்பட்டாலும், வெகு நாட்களுக்கு பின்னால் கூட அந்த இடைவெளிகளை போக்கி சுமூகமாக்கி கொள்ள முடியும். ஆனால் திருமண உறவுகள் அப்படி அல்ல. தொடர்ந்து தரப்படும் அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பு உணர்வுமே நம்மை உறவில் நம்பிக்கையுடன் நிலைத்து நிற்க செய்யும்.எனவே அவ்வபோது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை முடிந்த வரை உடனுக்குடன் களைந்து சரி செய்து கொள்வதுதான் உத்தமம்.
வேலையில் தரப்படும் பிரஷரும், அதனால் விளையும் டென்ஷனும் நம்மை பாதிக்காமல் இருக்க, உடற்பயிற்சிகள், விளையாட்டு, உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துதல் போன்றவற்றை தொடர்ந்து செய்து வர வேண்டியது அவசியம். எவ்வளவு வேலைகள் இருந்தாலும்,உங்களுக்கும், உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் நேரம் ஒதுக்கி,அதனை மகிழ்ச்சியுடன் கழிப்பது மிக முக்கியம். ஏனெனில் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கே! நான் சொல்வது சரி தானே?
பாலுறவு என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்ல. அன்பை பகிர்ந்து கொள்ள, மகிழ்ச்சியுடன் பொழுது போக்க, நெருக்கமும், நம்பிக்கை உணர்வும் அதிகரிக்க என்று அதற்கு பல பயன்பாடுகள் உண்டு. எனவே குழந்தை உருவாக வேண்டும் என்பது பாலுறவு கொள்வதற்கான தேவைகளில் ஒன்றே ஒன்றுதான். எனவே மகிழ்ச்சியாக பாலுறவு கொள்ளுங்கள், அதன் துணைப் பொருளாக (byproduct), கருத்தரித்தலும் நடக்கும்.
மனைவியின் வயிற்றில் கரு உருவான உடன், பாலுறவு கொள்ள கூடாது என்று சொல்வது அறிவியல் உண்மை இல்லை. பாலுறவு கொள்வதில் முன் விளையாட்டு என்று சொல்லப்படும் சமாச்சாரங்களை எப்போதுமே செய்து வரலாம்.
கரு உருவான உடனும், குழந்தை பிறந்ததற்கு பின்னும் பெண்களுக்கு உடலில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவை. சில நேரங்களில் இதனால் பாலுறவில் நாட்டமில்லாமல் போகலாம். அதனை ஆண்கள் புரிந்து கொண்டு, தேவையான அன்பையும் அரவணைப்பையும் அளிக்க வேண்டும். பெண்களும் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்க,உடற்பயிற்சி செய்வது அவசியம். அப்போது தான் தங்களின் சுயமதீப்பீட்டை தொடர்ந்து உயர்வாக வைத்துக்கொள்ள முடியும்.தம்பதியர் இருவரின் உயர்வான சுயமதிப்பீடும் (Self Esteem) இல்லற இன்பத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணி என்பது உளவில் உண்மை.
மேலும், இது போன்ற பிரச்சனைகளை தானாகவே தீர்க்க முடியாமல் போனால், உரிய தகுதி பெற்ற மருத்துவரை அல்லது பாலுறவுக்கென உளவியல் ஆலோசனை அளிப்பவர்களையோ நாடுவது குழப்பங்களை தீர்த்து கொள்ளவும், மகிழ்ச்சியான இல்லற உறவுக்கும் வழி வகுக்கும்.
இப்பொதெல்லாம், “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற அடிப்படையில்,திருமணத்திற்கு முன்னரே, தம்பதியருக்குள் என்னென்ன பிரச்சனைகள் எழ வாய்ப்பிருக்கிறது, அவற்றை எப்படி சரி செய்து கொள்வது, இல்லற வாழ்வு சிறக்க என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற உளவியல் ஆலோசனைகள் தரப்படுகின்றன.இதனை Pre Marital Counseling & Guidance என்று கூறுகிறோம்.
பல நேரங்களில், உளவியல் ஆலோசனை என்பது பிரச்சனைகளுடன் பொருத்திப்பார்க்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது. உளவியல் ஆலோசனையை மகிழ்ச்சியுடனும், வாழ்க்கை முன்னேற்றத்துடனும் பொருத்திப்பாருங்களேன்! அப்படி செய்தீர்களேயானால், அது உளவியல் ஆலோசகர்களான எங்களுக்கும் மகிழ்ச்சியை அள்ளித்தரும்! இல்லற வாழ்வு சிறக்கவும் உதவும்!!
உங்களின் கருத்தை பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment